Rock Fort Times
Online News

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி… ராகுலை சந்திக்க டெல்லி விரைகிறார் கனிமொழி எம்பி…!

2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீடு குழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளிடம் ஏற்கெனவே முதற்கட்ட பேச்சு வார்த்தையை நிறைவு செய்துள்ளது. மேலும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளிடம் இன்று (பிப்.27) திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஆனால், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய பெரிய கட்சியான அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடம் திமுக தொகுதி பங்கீட்டு குழு, இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. தொகுதி பங்கீடு மற்றும் தங்களின் நிலைப்பாடு தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசி இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கரும் கனிமொழியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசி இருந்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி திமுக மற்றும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என இரு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் பேசி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் இடையே அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. இத்தகைய அரசியல் சூழலில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி இன்று( பிப்.27) டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகரை நோக்கிய அவரது இந்தப் பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்