எப்.சி.புதுப்பிப்பு கட்டணம் 10 மடங்கு உயர்வு…- பிப். 25ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் ” ஸ்டிரைக்”…!
தகுதி சான்றிதழை புதுப்பிக்க 10 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து வருகிற 25-ந் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல்லை அடுத்த வள்ளிபுரத்தில் இன்று (17-2-2026) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், மாநில தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி மற்றும் பேருந்துகளுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பிக்க கட்டணம் ரூ.2,500 இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தியது. அதன்படி ,15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள், மினி சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் ரூ.14,500 ஆகவும் 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ 28,200 ஆகவும் நிர்ணயம் செய்து உள்ளது. ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் உயர்ந்து இருப்பதால் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் தகுதி சான்றிதழை புதுப்பிக்காமல் நிறுத்தி வைத்து உள்ளனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை உயர்த்தி இருப்பதால் ஒரு லாரி வைத்து தொழில் செய்து வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தகுதி சான்றிதழ் புதுப்பிக்க முடியாமல் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் 10 மடங்கு உயர்த்தியுள்ளதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் வருகிற 25- ந் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Comments are closed.