9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர் கைது…!
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 42 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்ற மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று(பிப்.10) நடைபெற்றது. அதேபோல, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை ஆகிய துறைகளில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் பங்கேற்றனர். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். அலுவலர்களின் பணி பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுப்புகளை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். அப்போதே போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

Comments are closed.