Rock Fort Times
Online News

என் மகன் குற்றவாளி இல்லை அவன் ஒரு அப்பாவி…- அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி..!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி, நிகிதா என்பவர் கோவிலுக்கு வந்து, அஜித்குமார் மீது நகை திருடியதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணை என்ற பெயரில் போலீசார் அவரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த நாளான ஜூன் 29ஆம் தேதி அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே கைது செய்யப்பட்ட 5 தனிப்படை காவலர்களும் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று (04.02.2026) நடைபெற்றது. இதில், “இந்த சம்பவம் காவல் மரணம் என்றும் நிகிதா கொடுத்த நகைத் திருட்டு புகார் முற்றிலும் பொய்யானது” என சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி தரப்பிலும் கடுமையான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. அதில், “ஒன்றுமே இல்லாத ஒரு வழக்கில் ஒருவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். பொய் புகார் கொடுத்த நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்ற போலீசாருக்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும். காவல்துறையின் செயலைப் பார்த்தால் மனசு பதறுகிறது. யாராக இருந்தாலும் இந்த வழக்கு முடியும் வரை சிறையிலேயே இருக்கட்டும்” என நீதிபதி தெரிவித்தார். மேலும், நிகிதா அளித்த பொய் புகார் குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அஜித்குமாரின் தாய் அளித்த பேட்டியில், “ஒன்றுமே அறியாத ஒரு அப்பாவியை மிளகாய் பொடி தெளித்து, தண்ணீர் கூட கொடுக்காமல் கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதெல்லாம் சட்டத்தில் இருக்கிறதா? தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்று சட்டத்தில் இருக்கிறதா? ஒரு அரக்கனை கொன்றது போல என் மகனைச் செய்துள்ளனர். அப்படி என்ன என் பையன் தீவிரவாதியா? காவலில் வைத்து விசாரிக்கலாமே, எதற்காக இவ்வளவு கொடுமை? மரத்தில் தொங்கவிட்டுள்ளனர். இனிமேல் யார் முகத்திலும் முழிக்கக் கூடாது என்று அவன் உயிரை விட்டுப் போயிருப்பான். அவனுக்கு அவ்வளவு கொடூரம் செய்துள்ளீர்கள். ஆறறிவு உள்ள மனிதர்களுக்கு தான் இரக்க குணம் என்பது இருக்கும். ஆனால் இவர்கள் ஐந்தறிவு ஜீவன்களாகவே நடந்துகொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் வெளியே வரக்கூடாது. அன்றைக்கு முழு விவரம் எனக்கு தெரியவில்லை. பிறகுதான் எல்லாம் தெரிந்தது. அதற்கான நேரமே எங்களுக்கு கொடுக்கவில்லை. என்ன நடந்தது என்று விசாரிக்க கூட நேரம் தரவில்லை. வயிற்றுக் கஞ்சிக்குக் கூட வாங்கிக் கொடுக்காமல், பட்டினியாக வைத்து என் மகனை கொன்றீர்களே… நீங்கள் எல்லாம் மனுஷ பிறவிகளா?” என உருக்கமாக தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்