தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பொங்கல் பண்டிகை மற்றும் அடுத்தடுத்த நாட்களில் ஆங்காங்கே உரிய அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்தவகையில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட சாலப்பாளையம் கிராமத்தில் இன்று(27-01-2026) ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக்கட்டு போட்டியின் போது யதேச்சையாக உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும். காளைகளின் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார். பொங்கல் பண்டிகையின் போது மதுரை, அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.