Rock Fort Times
Online News

கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தமிழகம் வருகை…!

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க பாஜகவும் குழு அமைத்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனைபடி, 8 பேர் கொண்ட பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஹேமமாலினி எம்.பி. தலைமையிலான இந்த குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி,ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அந்தக் குழு இன்று(செப்.30) தமிழகம் வந்துள்ளது. டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த பாஜக எம்.பி.க்கள் குழுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஹேமமாலினி எம்.பி. பதில் அளித்தார். அவர் கூறுகையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். கூட்ட நெரிசல் நடைபெற்ற பகுதியில் ஆய்வு செய்ய உள்ளோம். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை சந்திக்க உள்ளோம். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளோம். இந்த சம்பவம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு இது தொடர்பாக அறிக்கையை பாஜக தலைமைக்கு தாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்