Rock Fort Times
Online News

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா ஜூலை 7ம் தேதியன்று நடைபெற உள்ளது. விழாவில் ஜூலை 4-ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலான நாட்களில் தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் பக்தர்கள் பங்கேற்க வசதியாக ஜூலை 4ம் தேதி மதியம் முதல் 8ம் தேதி மதியம் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விழாவினை முன்னிட்டு, திருச்செந்தூரில் திருநெல்வேலி சாலையில் குமாரபுரம், நாகர்கோவில் சாலையில் தெப்பக்குளம், தூத்துக்குடி சாலையில் ஐடிஐ வளாகம் ஆகிய 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து, திருச்செந்தூர் கோவில் வாசல் வரை செல்வதற்கு வசதியாக 30 கட்டணமில்லா சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் பங்கேற்க வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி சென்னை, திருச்சி, கும்பகோணம்., காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு https://www.tnstc.in/ மற்றும் TNSTC Mobile App மூலம் பயணச்சீட்டினை முன்பதிவு செய்து பயணிக்க
வேண்டுகிறோம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்