இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகை ரம்ஜான். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும். ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் திறந்தவெளியில் ரமலான் தொழுகையை நிறைவேற்றினர். இதில் குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். ரமலான் பண்டிகையையொட்டி திருச்சி பாலக்கரை யாதவதெரு திடலில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த கூட்டுத் தொழுகையில் ஆண்கள், பெண்கள் திரளானோர் பங்கேற்று துவா செய்தனர். இதேபோன்று சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

