Rock Fort Times
Online News

சமயபுரத்தில் திருமணமண்டபம் கட்ட ஒரு ஏக்கர் நிலம் தானம் : தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் தாராளம்!

சட்டசபையில் எம்.எல்.ஏ கதிரவன் தகவல்!

தன்னால் இயன்ற வசதிகளை மக்களுக்கு செய்து தர வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தி வருபவர் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன். பெரம்பலூர் மற்றும் திருச்சியில் மக்களுக்கு சேவை செய்வதில் முன்னிலை வகித்து வருவது தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் . குழுமத்தின் தலைவர் சீனிவாசன் அவர்களின் மகன் கதிரவன், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற நாள் முதல் மக்களுக்கு பணி செய்வதில் முன்னணியில் இருந்து வருகிறார். அதற்கு மேலும் ஒரு உதாரணமாக தெரிய வந்தது சட்டசபையில் நேற்று கதிரவன் பேசிய பேச்சு . சட்டசபையில் நேற்று எம்எல்ஏ கதிரவன் பேசியதாவது – தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டாலும் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கோயில்களில் பல திருப்பணிகள் நடந்துள்ளன. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடந்து வரும் நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தால் 5 ஆயிரம் பேர் வரை தினமும் பயனடைகின்றனர். சமயபுரம் கோயிலில் மேற்கொள்ளவிருக்கும் மேம்பாட்டு பணிக்காக அரசு ரூ.60.43 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் இல்ல திருமணவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை சமயபுரம் “மாரியம்மன்” முன்னிலையில் நடத்த விரும்புகின்றனர். இதனை பூர்த்தி செய்யும் வகையில் குறைவான கட்டணத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருமணமண்டபம் கட்டித்தர வேண்டும் என்ற எனது எண்ணத்தை தனலட்சுமி சீனிவாசன் குழும நிறுவன தலைவரும் என் தந்தையுமான சீனிவாசனிடம் தெரிவித்தேன். அவர் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் பயன்பெற வேண்டும் எனக்கூறி கோயிலுக்கு மிக அருகில் அவரது பெயரில் உள்ள 1 ஏக்கர் நிலத்தை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தானமாக வழங்க முன்வந்துள்ளார். தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இதனை ஏற்று அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டித்தர வேண்டும். சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தங்கும் விடுதி (யாத்ரிநிவாஸ்), பெருந்திட்ட வளாகத்தில் கோயிலுக்கு தேவையான பிரசாதங்கள் தயாரிப்புநிலையம் அமைத்து தர வேண்டும். திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலுக்கு திருமண மண்டபம், தங்கும் விடுதி, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு திருமணமண்டபம், தங்கும் விடுதி மற்றும் புதிய தேர் அமைத்து தர அமைச்சர் சேகர்பாபு முன்வர வேண்டும். எம்.ஆர்.பாளையத்தில், 63 ஹெக்டர் பரப்பளவில் 2009 ஆம் ஆண்டு காப்பு காட்டில் வன உயிரின பூங்கா ஆரம்பிக்கப்பட்டது. இப்பூங்காவை மேம்படுத்தி தர வேண்டும், அய்யாறு மற்றும் சித்தாம்பூர் ஏரி பொது கரையை நிரந்தரமாக பலப்படுத்த வேண்டும். சித்தாம்பூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதாரநிலையம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்பேசினார். சமயபுரம் கோவிலுக்கு ஒரு ஏக்கர் நிலம்தானம் அறிவிப்பு தமிழகம் முழுவதும் இன்ப அதிர்ச்சியை தந்தாலும் சமயபுரம் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. கதிரவன் சென்னையில் இருந்தாலும் அவரது தந்தை சீனிவாசனை சமயபுரம் பகுதியில் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்