திருச்சி, புத்தூர் பகுதியில் அரசு விழியிழந்தோர் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வை குறைவுடைய மாற்றுத்திறன் மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயில பள்ளி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ராஜேஸ்வரி(18) என்கிற மாணவியும் பயின்று வந்தார். பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி தற்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி வருகிறார். இந்தநிலையில் இன்று (09-03-2025) அந்த மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த விடுதி கண்காணிப்பாளர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அரசு மருத்துவமனை போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதற்கு பள்ளி தரப்பிலும் அந்த மாணவியின் பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் தேர்வை முடித்துவிட்டு அது குறித்து பேசிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் திடீரென மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவர் காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.