ஸ்ரீரங்கம் கொலை வழக்கு குற்றவாளிகள் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது மூவருக்கு எலும்பு முறிவு- பிடிக்க முயன்ற இரண்டு போலீசாருக்கும் காயம்…! ( வீடியோ இணைப்பு )
திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் நேற்று முன்தினம் அன்பு என்கிற அன்பரசனை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. அன்பரசனை வெட்டியது யார் என்பது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தினேஷ் பாபு(28), சென்னையை சேர்ந்த லோகேஷ்(23), ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மகா பிரபு(23), அய்யனார்(22), கோபால கிருஷ்ணன்(23), சச்சின் விஜய்(21), தீபக் ராகுல்(22) திருவானைக்காவலை சேர்ந்த ரகுபதி(22) ஆகிய 8 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அன்பரசனுக்கும், தினேஷ் பாபுவிற்கும் சேவல் சண்டை மற்றும் கபடி போட்டியின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த முன் விரோதத்தின் காரணமாக தினேஷ் பாபு உள்ளிட்டோர் சேர்ந்து அன்பரசனை கொலை செய்தது தெரிய வந்தது. அதனையடுத்து போலீசார் 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து சென்றனர். அப்பொழுது தினேஷ் பாபு, லோகேஷ், ரகுபதி ஆகிய 3 பேரும் போலீசாரிடமிருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்கள் தடுப்பு சுவரை தாண்டிய பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தினேஷ் பாபு, ரகுபதி ஆகிய இருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. லோகேஷ்க்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனை அடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தப்பி ஓடிய மூவரையும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆரோக்கிய பூபதி மற்றும் முதல் நிலை காவலர் முகமது ரபிக் ஆகியோர் பிடிக்க முயன்ற போது இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற ஐந்து பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed.