பெரம்பலூர் ராணுவ வீரரின் மனைவியிடம் நகை கொள்ளை ! 24 பவுன் நகை மீட்பு -மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா ஐபிஎஸ் பேட்டி!
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரரின் மனைவியான பள்ளி ஆசிரியையிடம் 27பவுன் தங்க நகைகளை திருடிய நபரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 24 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன என்று காவல் ஆணையர் சத்தியப்பிரியா ஐ.பி.எஸ் கூறினார் .அவர் நிருபர்களிடம் கூறியதாவது : திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் , பேருந்தில் பயணம் செய்வோரிடம் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து, சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் 12ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் அம்மன்நகரில் வசித்து வரும் ராணுவ வீரர் வேணுகோபால், தனது மனைவி அருள்சுந்தரியுடன் (பள்ளி ஆசிரியை), திருச்சியில் உள்ள தனியார் நகை கடைக்கு வந்தார். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ்ஸில் சென்று, மெயின்கார்டுகேட்டில் இறங்கி, கடைக்கு சென்று கைப்பையை பார்த்தபோது, பையில் வைத்திருந்த 27 பவுன் தங்க நகைகளுடன் கூடிய சிறிய பேக்கை காணவில்லை .இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

தனிப்படையினரின் புலன்விசாரணையில் சந்தேக நபர்களின் நடவடிக்கைளை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் விபரங்களை சேகரித்தும், சத்திரம்பேருந்து நிலைய பகுதிகளில் CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் 03.04.23-ந்தேதி சத்திரம்பேருந்து நிலையத்தில் CCTV கேமரா பதிவுகளில் உள்ள சந்தேகநபர்களின் புகைப்படங்களை கொண்டு, தேடுதலின்போது, சத்திரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரவி என்பவரை விசாரணை செய்து, மேற்படி திருட்டு சம்பவத்தில் ரவி மற்றும் ரவி குடும்பத்தினர் ஈடுப்பட்டதை தனிப்படையினர் உறுதி செய்தனர். உடனடியாக ரவியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா். அவரிடமிருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள, 24 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு கமிஷனர் சத்யபிரியா கூறினார் .மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்த காவல் அதிகாரிகள், தனிப்படையினர் மற்றும் புலன்விசாரணையில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிாியா ஐபிஎஸ் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தாா். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை குற்ற வழக்குகள் 43 பதியபட்டுள்ளது . அதில் 35 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி மாநகரில் 2000 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்த வேண்டியதுள்ளது. ஏற்கனவே உள்ள 1600 கண்காணிப்பு கேமராவில் அதிக அளவில் செயல்படாமல் உள்ளது. பைக் வீலிங் செய்யும் இளைஞர்களிடம் தொடர்ந்து அவர்களை அழைத்து பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்து ஆலோசனையும் அறிவுரைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பைக் வீலிங் முழுவதும் மாநகரில் இல்லாத நிலை உருவாக்கப்படும். 20 பவுனுக்காக ஆள் கடத்தல் நடந்த சம்பவத்தில் கடத்தல் தங்கம் எவ்வளவு என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மீதமுள்ள ஐந்து பேரை தேடி வருகிறோம் என்றாா்.
