Rock Fort Times
Online News

திருப்பூரில் பயங்கர வெடி விபத்து: கட்டிடங்கள் இடிந்து 3 பேர் பலி- 4 பேர் படுகாயம்…!

திருப்பூரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்து 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-    திருப்பூரை அடுத்த பொன்விழா நகரில் இன்று(08-10-2024) மதியம் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இந்த வெடிச்சத்தம் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உணரப்பட்டது. வெடி விபத்து நடந்த இடத்தில் அருகில் உள்ள வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இடிபாடுகளுக்கு இடையே சிலர் சிக்கிக் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிட இடிபாடுகளுக்கு இடையே மூன்று பேர் சிக்கி பரிதாபமாக இறந்து கிடந்தனர். அவர்களின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், நான்கு பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.  அவர்களை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.  இதுதொடர்பாக திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி  கூறுகையில், சம்பவம் நடந்த இடத்தில் கார்த்திக்கின் மனைவி சத்திய பிரியா, சத்யபிரியாவின் சகோதரர் சரவணகுமார் ஆகியோர் கோவில் திருவிழாவிற்கான  வெடிகளை தயாரித்துள்ளனர். சரவணகுமார் ஈரோட்டில் பட்டாசு தயாரிப்புக்கான லைசன்ஸ் வைத்துள்ளார்.  ஆனால், இங்கு தயாரித்தது சட்டத்திற்கு புறம்பானது. இறந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்