“ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன்”- திருச்சி எஸ்.பி. வருண்குமார் அதிரடி…!
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண்குமார் ஐபிஎஸ் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே. இவரும் ஐபிஎஸ் முடித்துவிட்டு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி யாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருச்சி எஸ்.பி வருண்குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் மற்றும் சாதி குறித்தும் சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அவதூறு பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும்,நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது ரூ.2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எக்ஸ் வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாகவும், இது போன்று அவதூறு பரப்புகிறவர்களையும், அதனை தூண்டுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ” தான் வகிக்கும் ஐபிஎஸ் மற்றும் எஸ்.பி பதவி என்பது திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ வந்தது அல்ல. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம், வியர்வை சிந்தி சொந்த உழைப்பில் வாங்கிய வேலை. உயிரைப் போல நேசித்து தேர்ந்தெடுத்த காக்கி சட்டை என்றும், பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால் நான் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமா? என்ற கருத்துடன் வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸாக வைத்துள்ளார். அவர் யாரை இவ்வாறு சொல்கிறார் என்பதுதான் தெரியவில்லை. அவரது இந்த ஸ்டேட்டஸ் அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Comments are closed.