Rock Fort Times
Online News

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7 கோடி மோசடி வழக்கில் மேலாளர் உள்பட 3 பேர் கைது…!

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் ரஞ்சித் (45). இவரது நிர்வாகத்தின் கீழ் திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி உட்பட
6 மாவட்டங்களில் 46 கிளைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், ரஞ்சித் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் சிவகாசி கிளையில் தணிக்கை செய்துள்ளார். அப்போது பல நகைக்கடன் கணக்குகள் நீண்ட காலமாக திருப்பப்படாமல், வட்டி மட்டும் செலுத்தப்பட்டு வருவது தெரியவந்தது.  இதையடுத்து அந்த  கணக்குகளில் உள்ள நகைகளை ஆய்வு செய்தபோது, அவை போலியான நகைகள் என்பது உறுதியானது. இதுகுறித்து ரஞ்சித் விசாரித்தபோது, நகை  மதிப்பீட்டாளர் முத்துமணி உதவியுடன் சிவகாசியில் நகைக்கடை நடத்திவரும் தூத்துக்குடியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மேலாளர் ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், சிவகாசி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைக் கடை உரிமையாளர் பாலசுந்தரம், நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர்.  இந்நிலையில் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளரான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குமார் அமரேஷ் (37), துணை மேலாளரான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (28), உதவி மேலாளரான தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த முகேஷ் குமார் (29) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்