பெண் போலீசார் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்ட சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…!
தமிழகத்தில் உள்ள பெண் போலீசார் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பிய சவுக்கு சங்கர், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார் . அவர்மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் என்பவர் சவுக்கு சங்கர் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையிலும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக கோவையிலிருந்து திருச்சி அழைத்து வந்தனர். அப்போது அவர் நீதிபதியிடம், தன்னை வேனில் அழைத்து வந்த போது பெண் போலீசார் எனது கையை முறுக்கி ஏற்கனவே உடைந்த கையை மீண்டும் உடைத்தனர் என்று முறையிட்டார். இதனை கேட்ட நீதிபதி, அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர், அவரை லால்குடி கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் இன்று(16-05-2024) மீண்டும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.அப்போது சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ஹேமந்த் மூலம் கோரினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள், குற்றம் சாட்டப்பட்ட சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் இருவரும் தற்போது சிறையில் உள்ளனர். அவர்களின் வீடியோ இதுநாள் வரை அழிக்கப்படவில்லை. வீடியோ வெளியாகி காவலர்களின் மனதை புண்படுத்தியதற்கு ரெட் பிக்ஸ் நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது. சவுக்கு சங்கரை கோவையிலிருந்து அழைத்து வரும்போது பெண் போலீசாரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தால் அவர் தாக்கப்படுவார் என வாதிட்டனர். மேலும், சவுக்கு சங்கரை பார்க்க போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை என நீதிபதியிடம் குற்றம் சாட்டினர். அதன்பேரில், சவுக்கு சங்கர் வழக்கறிஞர்களுக்கு அரை மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் வாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ஜெயபிரதா உத்தரவிட்டார்.

Comments are closed.