Rock Fort Times
Online News

காவிரி, கொள்ளிடம் என 2 ஆறுகள் இருந்தும் 15 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை- வேங்கூர் பொதுமக்கள் விரக்தி…!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது வேங்கூர் ஊராட்சி. இப்பகுதி, இரு ஆறுகளுக்கு இடையில் இருந்தாலும் இங்கு அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.  குறிப்பாக, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சீயோன் கார்டன், சத்யம் நகர், சாமிநாதபுரம், கலைஞர் காலனி, ஜெயம் கார்டன், பெரியார் காலனி, அசோக் நகர், முருக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.  தற்போது கோடை காலமாக இருப்பதால் இப்பகுதிகளில் கடந்த 15 நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இதனால், விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள் தொடர்புடைய துறையினர்  இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  2 ஆறுகள் பாயும் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது.  ஆனால், இங்கிருந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது.
குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி  சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் நடத்தியும் எந்தவித பயனும் இல்லை. இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்