அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கண்ணனின் சகோதரி மகனும், திருவிடைமருதூர் திமுக நிர்வாகியுமான கலைவாணன் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதி நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகன் கலைவாணன் (30). நிதிநிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏவின் அக்காள் மகன்.
இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மோட்டாரை இயக்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் சென்றார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் கலைவாணனை கழுத்து, கை, தலை என பல பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த கலைவாணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பந்தநல்லூர் போலீசார் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறினர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.