Rock Fort Times
Online News

திருச்சியில் கடலை மிட்டாய் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து- 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிர் தப்பினர்….!

திருச்சி- சென்னை பைபாஸ் சாலை  ஏ.ஆர்.கே.நகர் 6-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி  (41). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் 3 மாடி கட்டிடம் உள்ளது.  இதில், தரைத்தளத்தில் அவர் கடலை மிட்டாய் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். முதல் தளத்தில் அவரது வீடு உள்ளது. இதில் சுப்பிரமணி, அவரது மனைவி மீனாட்சி (39), மகன்கள் சுப்பையா (13), ராமநாதன் (10) மற்றும் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார்.  உறவினரின் மகன் சஞ்சய் (10 ) என்ற சிறுவனும் சுப்பிரமணியன் வீட்டில் இருந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று நள்ளிரவு  12-30 மணி வரை சுப்பிரமணி கடலை மிட்டாய் தயாரிக்கும் தரைத்தளத்தில் இருந்து உள்ளார்.  பின்னர் முதல் மாடியில் உள்ள வீட்டுக்கு சென்று தூங்கினார்.  அப்போது நள்ளிரவு  1 மணி அளவில் கடலை மிட்டாய் தயாரிக்கும் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மிட்டாய் கம்பெனியில் தீ பிடித்து எரிய தொடங்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தனன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்து தீயை அணைத்துக் கொண்டிருந்தனர்.  அப்போது கடலை மிட்டாய் கம்பெனியில் இருந்த கேஸ் ஒன்று பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து சுவற்றை உடைத்துக் கொண்டு அங்குள்ள வயல்வெளியில் விழுந்தது.  மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் கூரை பறந்தது. தீயை அணைக்க ஒரு புறம் வீரர்கள் போராடிய நிலையில், மற்றொருபுறம் முதல் மாடியில் சிக்கித் தவித்த சிறுவர்கள் உட்பட 7 பேரையும் வீரர்கள் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.  சிறிது நேரத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து சத்தியவர்த்தனன் கூறும்போது, கடலை மிட்டாய் தயாரிப்பதற்கு பாகு காய்ச்சுவார்கள். இந்த பாகு காய்ந்து விடக்கூடாது என்பதற்காக எப்போதும் போல் இரவில் அடுப்பில் உள்ள அனலை அணைக்காமல் வைத்துவிட்டு சுப்பிரமணி சென்றுள்ளார். இது எதிர்பாராத விதமாக பக்கத்தில் இருந்த மரத்தூள் உள்ளிட்ட பொருட்களில் பிடித்து கடைசியாக சிலிண்டரில் பிடித்து சிலிண்டர் வெடித்து உள்ளது. அதிர்ஷ்டவசமாக சிலிண்டர் பக்கவாட்டு சுவரை உடைத்துக் கொண்டு வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையென்றால் கட்டிடம் இடிந்து உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்