திருச்சியில் காரில் கடத்தப்பட்ட 90 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் கைது…!
திருச்சி பகுதியில் புகையிலை பொருட்கள் பயன்பாடு அதிகம் இருப்பதாகவும், இதனால் இளைய சமுதாயம் பாதிக்கப்படுவதாகவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு புகார்கள் சென்றன. அந்த புகார்களின் அடிப்படையில் திருச்சி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும், காவல்துறையினரும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் பாக்கெட், பாக்கெட்டாக புகையிலை பொருட்கள் இருந்தது. இதுகுறித்து அந்த வாகனங்களில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த ஜேந்திரகுமார், ஞானசேகர் மற்றும் ஜெயச்சந்திரன் என்பதும் அவர்கள் கடைகளுக்கு புகையிலை பொருட்களை சப்ளை செய்ய கொண்டு சென்றதும் தெரிய வந்தது. தன்பேரில், 97 கிலோ எடை கொண்ட அந்த புகையிலை பொருட்கள், அதனை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தாங்கள் அருகாமையில் உள்ள கடைகளிலோ அல்லது வீடுகளிலோ பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 99449 59595, 94440 42322 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.