Rock Fort Times
Online News

கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டம்…!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்...

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதேபோல, இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா
கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 1-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார். மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(06-05-2024) காலை நடைபெற்றது.

இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.30 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 5 மணியளவில் சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதையடுத்து காலை 5.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கீழசித்திரைவீதியிலிருந்து புறப்பட்ட தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 9.30 மணிக்கு நிலையை அடைந்தது. தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.

சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதிகளில் மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்திருந்தனர். நாளை (7-ந்தேதி) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப் படுகிறது. நாளை மறுநாள்(8-ந்தேதி) இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்