Rock Fort Times
Online News

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: மாணவர்களை விட மாணவிகள் அசத்தல்…!

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்.1-ல் தொடங்கி 13-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில், பிளஸ்- 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் -2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 5603. இதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5161. (92.11%) தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி பெற்றோர் 115 (92%) 397 அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்