Rock Fort Times
Online News

நெல்லையில் பரபரப்பு சம்பவம்: காணாமல் போன காங்கிரஸ் நிர்வாகி எரித்துக் கொலையா?- கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு…!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங். இவரை இம்மாதம் 2ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை என புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கரைச்சுத்துபுதூரில் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மட்டுமின்றி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு கடந்த 30 ஆம் தேதி கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் வைத்து பார்த்தால் காங்கிரஸ் நிர்வாகியை திட்டமிட்டு யாரோ கொலை செய்து உடலை எரித்து கிணற்றில் வீசிசென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். காங்கிரஸ் நிர்வாகி உயிரிழந்த சம்பவம் அறிந்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லை விரைந்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராகுல்காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக ஈடுபட்டார். காவல்துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். கட்சி ரீதியாகவும் இதுதொடர்பாக விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்தார். காணாமல் போன காங்கிரஸ் நிர்வாகி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்