Rock Fort Times
Online News

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு…!

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் இன்று(19-04-2024) வாக்குப்பதிவு நடந்தது. இளம் தலைமுறை வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அந்தவகையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 250ல் கொண்டயம்பள்ளி ரோடு பகுதியை சேர்ந்த ரங்கசாமி மனைவி சின்னப்பொண்ணு (77) என்ற மூதாட்டி தனது மகன் கோவிந்தராஜ் மற்றும் மருமகள் சித்ரா ஆகியோருடன் வாக்களிக்க சென்றார். வாக்களிக்க சென்றபோது மூதாட்டி சின்னப்பொண்ணு திடீரென வாக்கு சாவடி மையத்தில் மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் மருத்துவர்கள் அங்கு வந்து அந்த மூதாட்டியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. தம்மம்பட்டி போலீஸார் மூதாட்டி உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல, சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிச்சாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார் .
இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்று கூறப்படுகிறது. வாக்களிக்க வந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்