திருச்சி, மதுரை, சென்னை, கோவை ஈரோடு, நாகர்கோவில், கும்பகோணம், புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் பிரணவ் ஜுவல்லரி செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளராக மதனும் அவரது மனைவி காா்த்திகா செயல்பட்டனர். இந்த நகை கடைகளின் விளம்பர தூதுவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகைகள் ராதிகா மற்றும் சைத்ரா ரெட்டி இருந்தனர். இக்கடையில் நகை சீட்டு போட்டால் 12 மாதத்திற்கு 9 சதவீத போனஸ் மற்றும் வாங்கும் நகைகளுக்கு 9 முதல் 12 மாதங்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டது.
இதனை நம்பிய அப்பாவி வாடிக்கையாளர்கள் பலரும் பிரணவ் ஜூவல்லரி நகை சீட்டில் சேர்ந்தனர். மேலும், பலர் பல்வேறு வகையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். இதனால், கோடிக்கணக்கில் பணம் சேர்ந்தது. ஆனால், நகை சீட்டில் சேர்ந்த பலருக்கு அதற்குரிய காலம் முடிவடைந்தும் நகையும் வழங்கப்படவில்லை, செலுத்திய தொகையும் திருப்பித் தரப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் எங்கே நம்மை கைது செய்து விடுவார்களோ என்று பயந்த நகைக்கடை உரிமையாளர் மதன் மற்றும் அவரது மனைவி காா்த்திகா ஆகியோர் கடைகளில் உள்ள நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகினர். அந்த நகை கடைகளில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு குறைந்த அளவு நகைகள் மட்டுமே இருந்தன.
இந்த மோசடி வழக்கில் திருச்சி பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை மேலாளர் கைது செய்யப்பட்டார்.
நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.
போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன், நேற்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி கார்த்திகா முன் ஜாமின் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை நீதிபதி சிவஞானம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால்,
கார்த்திகா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.