திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 60). இவர் சம்பவத்தன்று மளிகை பொருட்களை வாங்குவதற்காக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் துறையூர் நோக்கி சென்றார். தெற்கு ரத வீதி அருகே சென்ற போது, அதே தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த 3 சக்கர வாகனம் ரெங்கராஜின் மீது மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்கு பின்னர் ஒரு சில தினங்களில் இறந்து விட்டாா். இது தொடர்பாக ரெங்கராஜ் மனைவி பிரபாவதி, இழப்பீடு கேட்டு துறையூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் விபத்து ஏற்படுத்திய 3 சக்கர வாகனத்தின் பாலிசி நம்பரை ஆய்வு செய்ததில் அது இருசக்கர வாகனத்திற்குரிய பாலிசி நம்பர் எனவும், அதுவும் போலியாக தயாரித்து வழங்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், போலியாக பாலிசி ஆவணத்தை தயாரித்து கொடுத்தவர் திருச்சி பீமநகரை சேர்ந்த கனகராஜ் (54) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புலன்விசாரணை அலுவலர் அருண்குமார் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் துறையூர் போலீசார் போலியாக பாலிசி ஆவணத்தை தயார் செய்து கொடுத்த கனகராஜ் மீது வழக்குபதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.