சென்னையில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்- அமைச்சர்கள் மாநாடு…* முதல்வர் விஜய் பங்கேற்கிறார்..!
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்- அமைச்சர்கள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென்மாநில முதல்-அமைச்சர்கள் மாநாடு இன்று (19-08-2026) சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்- அமைச்சர் டி.கே.சிவக்குமார். கேரளம் முதல்-அமைச்சர் சதீசன், தெலுங்கானா முதல்- அமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்- அமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.மேலும், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் அவர், காரில் மாநாடு நடைபெறும் கோவளம் செல்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.