திருச்சி திருவானைக்காவல் அருகே, ரயில்வே டிராக்கில் பெண் ஒருவர் அடிபட்டு இறந்துகிடக்கிறார் என தகவல் வர,செய்தி சேகரிக்க ஸ்பாட்டுக்கு விரைந்துள்ளார் நமது செய்தியாளர். அப்போது , சென்னையிலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் திருவானைக்காவலை கடந்தபோது, 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கிறார். இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என ரயில்வே போலீசாரிடம் தான் சேகரித்த தகவலை அலுவலகத்திற்கு இன்பார்ம் செய்துவிட்டு கிளம்ப தயாராயிருக்கிறார் நமது ரிப்போர்ட்டர். அப்போது, ஸ்ரீரங்கம் க்ரைம் பிரிவில் பணியாற்றும் “ஆழ்வார்பேட்டை ஆண்டவர்” என அடைமொழியோடு அழைக்கப்படும் கோலிவுட் ஹீரோவின் பெயரைக்கொண்ட எஸ்.ஐ. ஒருவர், வியர்க்க விறுவிறுக்க பேட்ரோல் வாகனத்திலிருந்து வந்து இறங்கியிருக்கிறார். என்ன சார்? நைட்டெல்லாம் தூக்கமில்லை போல, என கேட்டதுதான் தாமதம் மனுஷன் புலம்பி தள்ளியிருக்கிறார். அப்படியென்ன நடந்தது என்கிறிர்களா? ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் அதிகாலை 1.30 மணிக்கு போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு போன்செய்து, தனது வீட்டருகே வாலிபர்கள் குடித்துவிட்டு சண்டைபோடுவதாக சொல்லியிருக்கிறார். இதுகுறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட எஸ்.ஐ யை அனுப்பியிருக்கிறார்கள். சென்ற இடத்தில் தான் தெரிந்திருக்கிறது, சண்டை வந்தது இடப்பிரச்சனையால் என்று. சிவில் பிரச்சனையெல்லாம் நான் டீல் பண்ணமுடியாது. ஸ்டேஷன் வந்து புகார் கொடுங்கள் என சொல்லிவிட்டு நகரும்போது, இடத்தின் உரிமையாளர் ஸ்ரீரங்கம் எஸ்.ஐ. யை ஆபாசவார்த்தைகளால் வறுத்தெடுத்தெடுத்து இருக்கிறாா். பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவர், தான் கொண்டுவந்திருந்த லத்தியால் லைட்டாக ஒரே ஒரு அடிதான் அடித்தாராம். விசாரிக்க வந்த எஸ். ஐ, சரக்கடித்துவிட்டு போதையுடன் வந்து என்னை பொலந்துவிட்டார் என அலறிக்கொண்டு, ஸ்ரீரங்கம் ஜி.ஹெச்-ல் அட்மிட் ஆகிவிட்டாராம் இடத்தின் உரிமையாளர். இதென்னடா நமக்கு வந்த சோதனை. வந்தபோன் கால் ரயில்வே போலீசிடம் இருந்து வந்திருந்தால் கூட, தூக்கம் மட்டும் தான் போயிருக்கும். இப்படி “இடப்பிரச்சனையை தீர்க்கப்போய் புதுப்பிரச்சனையில் மாட்டிக்கிட்டோமே” என விழிபிதுங்கி நின்றிருக்கிறார் போலீஸ் எஸ்.ஐ. நடந்தது என்னவோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.