திருச்சி மாவட்டத்தில் தாளக்குடி, மாதவம்பெருமாள், கல்லணை அருகே உள்ள கிளிக்கூடு ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவானைக்காவல் அருகே கொள்ளிடம் ஆற்றில் ராமசந்திரனுக்கு சொந்தமான அரசு அனுமதி பெற்ற மணல் குவாரியை திருநெல்வேலியை சேர்ந்த ராஜா என்பவர் மேற்பார்வை செய்து வருகிறார். இந்த குவாரியில் அரசு அனுமதித்த அளவை விட அதிகளவு மணல் அள்ளப்படுவதாகவும், குறிப்பாக மணல் குவாரியில் 3 அடி தான் மணல் அள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தும் 10 அடிக்கு மேல் மணல் அள்ளுவதாகவும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்தநிலையில் நேற்று ( 12.09.2023 ) காலை 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் (stock point) பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 7 மணி வரை நீடித்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் உதவி பொறியாளர் சாதிக் பாஷா, இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் சத்யராஜ் ஆகிய மூன்று பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள், ரகசிய இடத்தில் வைத்து நள்ளிரவு 2 மணி வரை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு மேல்விசாரணைக்கு அழைக்கும் போது சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும் என நிபந்தனையுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் காலை முதல் மாலை வரை பரபரப்புடன் காணப்படும் மணல் குவாரி மூடப்பட்டுள்ளது. இதனால், ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மணல் அள்ளும் பொக்லைன் வாகனங்கள் ஆற்றிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.