Rock Fort Times
Online News

திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது …

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, கல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 51). இவர், திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் கடை நடத்தி வருகிறார். இவர் தொழில் விருத்திக்காக தனது சொந்த வீட்டை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெற முயன்றார். கடன் பெறுவதற்கு தனது வீட்டினை உட்பிரிவு செய்து தனிப்பட்டா வேண்டி கடந்த 13.7.2023 அன்று விண்ணப்பித்துள்ளார்.

விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால் ரமேஷ் குமார் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவுக்கு கடந்த 28.8.2023  சென்று  கல்பாளையம் பிர்கா சர்வேயர் கருப்பையா (வயது 48) என்பவரை சந்தித்து  கேட்டுள்ளார். அதற்கு அவர் , தனக்கு 5,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் குமார், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று( 08.09.23) கருப்பையாவை சமயபுரம் பைபாஸ் சாலையில் சந்தித்து ரமேஷ்குமார் பணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர்கள், சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர் கொண்ட குழுவினர் கருப்பையாவை கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்