
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதனை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. அதேபோல, திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுகந்தி, திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும், கடந்த 9 வருடமாக மத்திய அரசு இளைஞர்களுக் கு வேலை வழங்கவில்லை என கூறி இளைஞர் ஒருவர் பிணம் போல சித்தரிக்கப்பட்டிருந்தார்.
இதேபோல, திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று தலைமை தபால் நிலையம் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 500க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட குழு சார்பில் நம்பர் 1 டோல்கேட், துறையூர், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் மொத்தம் 5 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.