திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறை தோட்டம் என்ற பகுதியில் வசித்து வந்த மோகன்ராஜ் அவரின் சகோதரர் செந்தில்குமார், மோகன் ராஜ் தாய் புஷ்பவதி , சித்தி ரத்தினம்மாள் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 03.09.2023 )வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி பல்லடம் அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் மற்றும் பாஜகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். சரணடைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேசனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பல்லடம் தொட்டம்பட்டி பகுதியில் உள்ள முட்புதரில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக இன்று அதிகாலை பல்லடம் டி.எஸ்.பி. சவுமியா மற்றும் போலீசார் வேனில் பலத்த பாதுகாப்புடன் தொட்டம்பட்டி பகுதிக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வெங்கடேசன் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார். பின்னர், அவரை பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வேனில் அழைத்து வந்து கொண்டிருந்தனர். தொட்டம்பட்டி காட்டுப்பகுதியில் செல்லும்போது வெங்கடேசன் சிறுநீர் கழிக்க வேண்டும் என தெரிவிக்கவே போலீசார் வேனை நிறுத்தினர். சிறுநீர் கழிக்க சென்ற வெங்கடேசனின் பாதுகாப்புக்காக 2 போலீசார் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் வெங்கடேசன் திடீரென 2 போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பிச் சென்றார். உடனே, டி.எஸ்.பி. சவுமியா தனது கை துப்பாக்கியால் வெங்கடேசனை நோக்கி சுட்டார். இதில் அவரது ஒரு காலில் குண்டு பாய்ந்ததில் கீழே விழுந்தார். இருப்பினும் ஒரு காலுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரை பிடிக்க முயன்ற போலீஸ்காரர்கள் மீது வெங்கடேசன் கற்களை வீசி தாக்கினார். இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இதையடுத்து டி.எஸ்.பி. சவுமியா பாதுகாப்புக்காக வெங்கடேசன் மீது மற்றொரு ரவுண்டு சுட்டார். இதில் வெங்கடேசனின் மற்றொரு காலில் குண்டு பாய்ந்தது. 2 கால்களிலும் காயம் ஏற்பட்டதால் சரிந்து கீழே விழுந்த வெங்கடேசனை போலீசார் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் வெங்கடேசன் கல்லால் தாக்கியதில் காயமடைந்த போலீஸ்காரர் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.