திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் காமராஜ் ( வயது 49). இவரது மனைவி இளையரசி (44). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உணவகம் நடத்தி வந்தனர். தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக காமராஜுக்கு பணம் தேவைப்பட்டது. உங்கள் வீட்டில் இருந்து வரதட்சணையாக பணம் வாங்கி வருமாறு இளையரசியிடம் காமராஜ் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், மது குடித்துவிட்டு வந்து மனைவியை காமராஜ் துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, வழக்கம் போல் மது அருந்திவிட்டு வந்த காமராஜ் மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில், ஏற்பட்ட தகராறில் பூரி கட்டையால் இளையரசியின் முகம் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர், அரிவாளால் அவர் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இளையரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த காமராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், காமராஜுக்கு கொலைக்குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும், வரதட்சணை கேட்டு துன்புறுத்திய குற்றத்துக்காக மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனயும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். மேலும், குழந்தைகள் இருவருக்கும் தலா ரூ.ஒரு லட்சம் அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் , தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜாகீர் உசேன் ஆஜரானார்

Comments are closed, but trackbacks and pingbacks are open.