மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி (45), அவரது கணவர் இறந்து விட்ட நிலையில், 3 குழந்தைகளை வளர்க்க யாசகம் பெற்று வந்துள்ளார். 4 வயதுள்ள ஒரு குழந்தையுடன் திருச்சி மாநகரப் பகுதியில் யாசகம் எடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், யாசகம் பெறும் குழந்தைகளை மீட்கும் வகையில், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு, வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து மேற்கொண்ட சோதனை மற்றும் மீட்பு நடவடிக்கையில் 46 பேர் மீட்கப்பட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த குழந்தைகளில் ராஜேஸ்வரியின் 4 வயது குழந்தையும் ஒன்று. எனவே, காப்பகத்தில் உள்ள குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி அவர் சமரச தீர்வு மையத்தை அணுகியுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் அதற்கென உள்ள வழிமுறைகள் குறித்து விளக்கியதுடன், நினைத்தவுடன் குழந்தையை ஒப்படைக்க முடியாது, எனவும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் கூறியுள்ளனர். இதனால், குழந்தையை மீட்க முடியாது என விரக்தியடைந்த ராஜேஸ்வரி, தான் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். மேலும் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து நீதிமன்ற காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.