தூத்துக்குடியில் மத்திய அரசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 35 வயது நபர் ஒருவர் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலியில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். கடந்த வாரம் அவரிடம் பேசிய வாலிபர் ஒருவர், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவரும் தூத்துக்குடி முத்தையாபுரம் காட்டுப்பகுதியில் சந்திப்பது என முடிவு செய்தனர். அதன்படி, அந்த மத்திய அரசு ஊழியர் அங்கு சென்றுள்ளார். அங்கு அவருக்காகக் காத்திருந்த கும்பல் ஒன்று, அவரை மிரட்டி செல்போன், பணம் மற்றும் ரூ.1லட்சம் பணத்தைக் கூகுள் பே மூலம் பறித்துள்ளது.
இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்த மோசடி கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைத்தனர். இதையடுத்து, டேட்டிங் ஆப்பில் அந்த மோசடி கும்பல் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், திருப்பூர் விக்னேஷ் நகர் சார்லஸ் மகன் அஸ்வின் (20), முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மகராஜா என்கிற சுள்ளான் (21), மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் பணம், நகையை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. அதாவது, தூத்துக்குடி டவுன் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் சென்னையில் பணிபுரிந்து வருவதும், அவரை இதே ஆப் மூலம் தொடர்பு கொண்ட இந்த கும்பல் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள ஒரு ஷெட்டிற்கு வரவழைத்து அவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்துள்ளது தெரிய வந்தது. அதேபோல, விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒருவரிடமும், இதேபோல் இந்த கும்பல் பணம் பறித்துள்ளது. இந்த பணம் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக மேலும், 4 சிறுவர்களை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
1
of 872
Comments are closed, but trackbacks and pingbacks are open.