Rock Fort Times
Online News

கிளிகள்-வினோத பறவைகளை விற்க முயன்ற 5 பேர் கைது…

திருச்சி வனத்துறையினர் நடவடிக்கை..

திருச்சியில் பிரதான கடைவீதிகள், மார்க்கெட் பகுதிகளில் கிளிகள், மற்றும் வினோத பறவைகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது .இந்த தனிப்படையினர் திருச்சி மலைக்கோட்டை கடைவீதி, காந்தி மார்க்கெட், பொன்மலை சந்தை, உறையூர் மீன் மார்க்கெட் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று திருச்சி பாலக்கரை, கீழப்புதூர், குருவிக்காரன் தெருவில் தனிஷ் சகாயஜென்சி, சாந்தி, மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் தங்களது வீட்டில் 108 பச்சைக்கிளிகள், 30 முனியாஸ் பறவைகளை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பறவை இனங்களை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வேட்டையாடி கொடுத்த கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மேட்டுமருதூர் கிராமத்தை சேர்ந்த திருஞானம் என்பவரது வீட்டை சோதனை செய்து அவரிடமிருந்து 8 முனியாஸ் பறவைகள், வேட்டைக்கு பயன்படுத்திய இரு சக்கர மோட்டார் வாகனம் மற்றும் வலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் கிரண் கூறுகையில், கிளிகளை விற்பதும், வாங்குவதும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். கிளிகளை யாராவது விற்பது தெரிந்தால் வனச் சரக அலுவலர் அலைபேசி எண் 94436 49119 ல் தொடர்பு கொள்ளவும். தங்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்