துறையூரில் கொத்தனார் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது-வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு…!
திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (39). கொத்தனார். இவருக்கு ராசாத்தி (35) என்கிற மனைவியும் ,சுஜித் சரண் (11) என்கிற மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மணிமாறன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது மணிமாறன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர் . இதுகுறித்த புகாரின் பேரில், துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், திருச்சி எஸ்.பி.வருண்குமார் உத்தரவின்பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சோனி ( எ) இளவரசன் மற்றும் அவரது கூட்டாளியான ஈஸ்வரன் (21), வேல்முருகன் (24) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிமாறன் வீட்டில் கொள்ளை அடித்தது அவர்கள்தான் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் முக்கால் பவுன் எடையுள்ள தங்க நகைகளை துறையூரில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அடமானம் வைத்ததும், மீதி உள்ள நான்கு அரை பவுன் எடையுள்ள தங்க நகைகளை வீட்டின் பின்புறம் புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடமிருந்து நகைகளை மீட்ட தனிப்படையினர், மூவரையும் துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Comments are closed.