திருச்சி பெல் வளாகத்தில் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர். வெண்கல சிலையை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- நமது தலைவர் எம்.ஜி.ஆர். சிலையை ஒரு தொண்டனாய் இருந்து திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எம்.ஜி.ஆர்.சரித்திரம் படைத்த தலைவர் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர். அதேபோல்தான் ஜெயலலிதாவும். தனது உடல் நலனை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே மறைந்த தலைவர் ஆனால், இன்னொரு தலைவர் இருக்கிறார் அவர்தான் கருணாநிதி தன் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்த தலைவர். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியை பின்பற்றி நாம் கட்சி நடத்தி வருகிறோம். அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டனும் உச்ச பதவிக்கு வர முடியும். திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டனும் எம்.எல்.ஏ., எம்.பி., முதலமைச்சர் கூட ஆகலாம். பொதுச்செயலாளர் பதவிக்கும் வரமுடியும். தி.மு.க.வில் சாதாரண தொண்டன் பொதுச் செயலாளர் பதவிக்கு வர முடியுமா?. தி.மு.க.வில் பணத்துக்காக கட்சி நடத்தப்படுகிறது. அங்கே பணம் இருந்தால் தான் எல்லாமே நடக்கும். அதிமுகவை எப்படியாவது உடைத்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை தொட்டுக் கூட பார்க்க முடியாது. தி.மு.க.வின் பி டீமாக ஓ. பன்னீர் செல்வமும், வைத்திலிங்கமும் செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பன்னீர்செல்வம் சார்பில் திருச்சியில் மாநாடு நடத்தினார்கள். ஆனால் அங்கே இந்த அளவுக்கு கூட்டம் இருந்ததா? இங்கே பொதுக்கூட்டம் தான் நடக்கிறது மாநாடு போல கூட்டம் கூடி இருக்கிறது. 31 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியிலே ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை அங்கே சென்று என்ன செய்வார்கள். அமலாக்கத்துறையால் தி.மு.க.மந்திரிகள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். எங்களிடம் மடியில் கனமில்லை. வழியில் பயமும் இல்லை. அங்கே அப்படி இல்லை தி.மு.க. அமைச்சர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். அதனால் பயப்படுகிறார்கள்.











செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தபோது முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் எதற்காக சென்று பார்த்தார்கள். அப்படி என்ன அவசியம் இருக்கிறது. செந்தில் பாலாஜியிடம் 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை. அவர்களுடைய அமைச்சர் தியாகராஜனே சொல்கிறார். இது தொடர்பாக அவர் அமலாக்கத் துறையிடம் வாய் திறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு எல்லாம் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை. செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சி கவிழ்ந்து விடும். தி.மு.க ஆட்சி அமைந்த இந்த 2 ஆண்டு காலமும் இருண்ட ஆட்சியாக தான் இருக்கிறது. மக்கள் துன்பப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். தி.மு.க.தேர்தல் அறிக்கையில் 560 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அதில் ஒன்று, இரண்டை மட்டும் நிறைவேற்றிவிட்டு எல்லாம் செய்து விட்டதாக பேசுகிறார்கள். இன்றைக்கு தக்காளி, வெங்காயம், பருப்பு, இஞ்சி விலை அதிகமாக விற்கப்படுகிறது. இதைப் பற்றி எல்லாம் மு.க.ஸ்டாலின் கவலைப்படுவதில்லை. திருச்சியில் தி.மு.க.மூத்த அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர் திருச்சிக்கு அ.தி.மு.க.ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். அவருக்கு எதுவுமே தெரியவில்லை. அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் தான் திருச்சியில் ஸ்மார்ட் , சிட்டி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என கூறினார்

Comments are closed, but trackbacks and pingbacks are open.