திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையிலும், துணை மேயர் ஜி.திவ்யா மற்றும் ஆணையர் வைத்திநாதன், ஆகியோர் முன்னிலையிலும் இன்று ( 28.07.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன் , துர்காதேவி ,ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள் செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் அன்பழகன் பேசுகையில், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதம்தோறும் மதிப்பூதியம் வழங்கிட அரசு ஆணையிட்ட தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். பின்னர் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
கவுன்சிலர் மலர்விழி: பி.ஜி.நகர், சிற்பி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் பைஸ் அகமது: எனது வார்டு பகுதியில் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
மேயர்- தவறான தகவல்களை கூறக்கூடாது, தினம்தோறும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மாநகராட்சி திருச்சி மாநகராட்சி மட்டும் தான். 25 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லாத அளவிற்கு அமைச்சர் நேரு திட்டங்களை திருச்சியில் செயல்படுத்தி உள்ளார்.எனவே தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மண்டல குழு- 3 ன் தலைவர் மதிவாணன்:
திருச்சியில் புதிதாக அமைய உள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் . திருச்சி தெப்பக்குளம் கோட்டை நுழைவாயிலுக்கு அன்பில் தர்மலிங்கம் பெயர் சூட்ட வேண்டும்.
திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம்:- பட்ஜெட்டில் வார்டுக்கு ஒரு கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தீர்கள்? அது எப்போது அமலுக்கு வரும்?
மேயர்: கவுன்சிலர்களுக்கான அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.ம.மு.க. கவுன்சிலர் செந்தில்நாதன்:-
தூய்மை பணியாளர்களுக்கு ரூ.525 க்கு பதிலாக 500 மட்டுமே வழங்கப்படுகிறது.
கவுன்சிலர் கோவிந்தராஜன் (காங்கிரஸ் ) :-
மணிப்பூர் கலவரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவஹர் (காங்கிரஸ்):
27 ஆண்டுகளுக்கு பின்பு வரி மேல்முறையீட்டு குழு அமைத்ததற்கு நன்றி.
ரெக்ஸ் (காங்கிரஸ்):
தெரு விளக்கு மற்றும் குடிநீர் பழுது பணியினை மேற்கொண்டு வரும் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
செல்வி சுப்பிரமணியன் (திமுக):-
எனது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.
நாகராஜ் (திமுக):
திருச்சி உய்ய கொண்டான் பகுதி வயலூர் சாலையில் இருந்து அல்லித்துறை வரை டெண்டர் விட்ட பின்னரும் எந்த பணிகளும் நடக்கவில்லை என்றார்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் 98 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அப்போது 43-வது தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால் ஒரு மனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கண்டித்து மாநகராட்சி கூட்டம் முடிந்த பிறகும் 2 திமுக கவுன்சிலர்களும் மாநகராட்சி கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில்நாதனும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.