Rock Fort Times
Online News

அரியலூரில் ஒரே நாளில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை…- இருவேறு வழக்குகளில் நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு!

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கு மற்றும் வரதட்சணை துன்புறுத்தலில் தற்கொலை செய்து கொண்ட இருவரின் வழக்கு உள்ளிட்ட இரு வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 12 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வழக்குகளின் விபரங்கள் வருமாறு.,

“அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கந்தசாமி(60). அரவது மகன் கலைமணி(25). கலைமணிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(56) என்பவருக்கும் சாக்கடை வாய்க்கால் சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு இருவருக்கும் இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், அவரது மகன் அரவிந்தன்(32), ரவிச்சந்திரன் தம்பி சேகர், மனைவி வளர்மதி(50), அவரது மகன்கள் அகிலன்(26), கபிலன்(25), பவித்ரன்(23), ரவிச்சந்திரன் தங்கை கலா(45), அவரது கணவன் குருசாமி(52) ஆகியோர் ஒன்று சேர்ந்து கலைமணியை தாக்கினர். அப்போது, கலைமணியின் தந்தை கந்தசாமி, கலைமணியை வீட்டினுள் வைத்து பூட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் கந்தசாமியை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செந்துறை போலீஸார் ரவிச்சந்திரன், அவரது மகன்களான அரவிந்தன், ரவிச்சந்திரன், தம்பி சேகர், மனைவி வளர்மதி, அவரது மகன்கள் அகிலன், கபிலன், பவித்ரன், ரவிச்சந்திரனின் தங்கை கலா, அவரது கணவர் குருசாமி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ( மார்ச் – 21 ) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்”.

இதேபோல், வரதட்சணை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அரியலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கனகவள்ளி. இவருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜன் மகன் செந்தில் குமரவேலு என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 25 சவரன் நகை, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், மற்றும் திருமணச் செலவில் பாதி தொகையான 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவை பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டன. இந்நிலையில், செந்தில் குமரவேலு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வரதட்சனை கேட்டு கனகவள்ளியை துன்புறுத்தியுள்ளார். மேலும் தனது மனைவியை அவர் தாய் வீட்டிலேயே கொண்டு வந்து விட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கனகவள்ளியின் தந்தை ராஜேந்திரன், கடந்த 2018ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தனது தந்தையின் சாவுக்கு நான் தான் காரணம் என எண்ணி மன உளைச்சலில் இருந்த கனகவள்ளி, எனது உயிரிழப்பிற்கு கணவரும், அவரது குடும்பத்தாரும் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் கனகவள்ளியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கனகவள்ளியின் கணவர் செந்தில்குமாரவேலு, அவரது அம்மா கலாவதி, அண்ணன் முருகன் மற்றும் அரிகிருஷ்ணவேலு ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதோடு 2 பேரின் உயிரிழப்புக்கு காரணமான 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், 8 லட்சத்து 81 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். ஒரே நாளில், இரு வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 12 நபர்களுக்கு,ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது, அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்