ஸ்ரீபெரும்புதூர் தோட்டக்கார தெருவைச் சேர்ந்த முருகன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மஞ்சுளா மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டுகளில் முருகன் தனது தொழிலுக்காக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வட்டிக்கு கடன் வழங்கும் நரேஷ் என்பவரிடம் 4.40 கோடி ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். அதனை வட்டியோடு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 கோடியே 67 லட்சத்துக்கு 87ஆயிரம் ரூபாய் திரும்ப குடுத்து கணக்கு முடித்துள்ளாா். மேலும் 6 லட்சம் பாக்கி தரவேண்டும் என்று நரேஷ் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை முருகன் வீட்டிற்கு வந்த நரேஷ் தனக்கு தர வேண்டிய 1.5 கோடி கேட்டு முருகனையும் அவரது மனைவி மஞ்சுளாவையும் கேவலமாக பேசியதோடு குடும்பத்தையே கொன்று விடுவேன் என்றும் மிரட்டியும் உள்ளார். மேலும் தனக்கு டிடிவி தினகரனை தெரியும், தமிழக அமைச்சர்களை தெரியும் உன்னை அழித்து விடுவேன் என்றும் மிரட்டிவிட்டு சென்று உள்ளார். இதனால் மனமுடைந்த முருகனின் மனைவி மஞ்சுளா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த 50க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரது மகன் மற்றும் உறவினர்கள் மஞ்சுளாவை மீட்டு பூந்தமல்லி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மஞ்சுளா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினா் தற்போது நரேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வட்டிக்கு கடன் கொடுக்கும் நரேஷின் தொல்லையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.