முந்தைய திமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுபான கொள்முதல் உட்பட பல வழிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந் தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன், டாஸ்மாக் முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர்கள் டி.ராமதுரை முருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் முன்னாள் நேர்முக உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜியின் நண்பர்கள் ரத்தேஷ் ராஜ், மூலனூர் கார்த்திக் ஆகிய 7 பேர் மீது கடந்த ஜூலை 28-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நேற்று( ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதற்கு முகாந்திரம் உள்ளது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியம். எனவே, முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்கு எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல் மற்றும் முகுல் ரோத்தஹி ஆகியோர் முறையிட்டனர். இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கை இன்று( ஜூலை 31) விசாரணைக்கு பட்டியலிடுவதாக உறுதியளித்தார். அதன்படி, இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்ட பிறகு தான் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்குவது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது செந்தில் பாலாஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.