மாட்டுப் பொங்கல் திருநாள் அன்று திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையம் சாத்தப்பட்டிருந்தது ஏன்?- பொதுமக்கள் கேள்வி?
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகியவை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. முக்கியமான பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியும் களை கட்டி உள்ளன. இந்நிலையில் திருச்சி மாவட்டம், முசிறி- கொடுந்துரை சாலையில் மாட்டுப் பொங்கல் தினமான நேற்று சில நபர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஒருவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அந்த நபர் வாத்தலை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது காவல் நிலைய கதவு மூடப்பட்டு இருந்ததால் ஐயா…ஐயா…என சத்தம்போட்டு பலமுறை கூப்பிட்டுள்ளார். ஆனால், யாரும் உள்ளே இருந்து வெளியே வராததால் நீண்ட நேரம் காத்திருந்த அந்த நபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். காவல் நிலைய கதவு மூடப்பட்டிருந்தது ஏன் என்று தெரியவில்லை. இரவு ரோந்து பணிக்கு போலீசார் சென்று இருந்தாலும் யாராவது ஒருவராவது காவல் நிலையத்தில் இருக்க வேண்டாமா?, அந்த நேரத்தில் பெரிய குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் யாரிடம் முறையிடுவது? என அப்பகுதி மக்கள் கேட்கின்றனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட மக்கள் எந்த நேரமாக இருந்தாலும் காவல் நிலையத்தில் வந்து முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை ஆசாமிகளால் தாக்கப்பட்ட ஒருவர் புகார் அளிப்பதற்காக வந்துள்ளார். அந்த நேரத்தில் காவல் நிலையம் சாத்தப்பட்டு இருந்திருக்கிறது. அவர் வேறு வழியின்றி வீட்டிற்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். காவல் நிலையம் சாத்தப்பட்டது ஏன்? என்பது தெரியவில்லை. இனிமேலாவது இது போன்ற சம்பவம் நடைபெறா வண்ணம் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Comments are closed.