சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று(30-01-2024) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில்பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஜாமீன் மனுவை ஆராய்ந்ததில் கடந்த முறை மறுத்த சூழல்கள் மாறியதாக தெரியவில்லை. கடைநிலை ஊழியர் கைதானால் 48 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஆனால், கைதாகி 230 நாட்கள் ஆகியும் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? என அரசுக்கு கேள்வி எழுப்பினார். மேலும், சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே என கூறினார். இதையடுத்து செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
1
of 927
Comments are closed, but trackbacks and pingbacks are open.