காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்து கொண்டார். அவர் முதல் வரிசையைில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அருகில் அமர்ந்தது கவனம் பெற்றது. இதற்கிடையே ராகுல் காந்தி அலுவலகத்தில் இருந்து புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாக கூறி அந்த அழைப்பை திமுக தலைவர் ஸ்டாலின் பேச மறுத்ததாகவும் வாழ்த்து மட்டும் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று( நவம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவுக்கு தங்களுக்கு அழைப்பிதழ் வந்ததாகவும் நீங்கள் வாழ்த்து செய்தி அனுப்பியதாகவும் தகவல்கள் வருகிறது” என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு “அழைப்பிதழ் எல்லாம் வரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய உதவியாளரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வாழ்த்து தெரிவித்தேன். கடிதமும் அனுப்பி இருக்கிறேன்” என்று பதிலளித்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக சகோதரர்களைப் போல நெருக்கமாகப் பழகியவர்கள் ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின். ஸ்டாலினை தவிர நான் வேறு எந்த அரசியல்வாதியையும் அண்ணன் என்று கூறியதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். ஆனால் இவர்களுக்கிடையேயான உறவில் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் விரிசல் விட தொடங்கியது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்தது விரிசலை மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

Comments are closed.