Rock Fort Times
Online News

கேரளம், புதுச்சேரி, அசாமில் வாக்குப்பதிவு…* நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றும் வாக்காளர்கள்…!

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் ஒரேகட்டமாக இன்று (09.04.2026) காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, அஸ்ஸாமில் உள்ள 126 தொகுதிகளிலும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் எனப் பலரும் ஆர்வத்துடன்  வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கேசரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும், பரவூர் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான வி.டி. சதீசன் வாக்களித்தார். மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் தொகுதிக்கு உட்பட்ட முடவன்முகலில் உள்ள  வாக்குச்சாவடியில், அமைச்சரும், இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருமான வி. சிவன்குட்டியும், நடிகர் மோகன்லாலும் வாக்களித்தனர். அதே சமயம் கர்நாடகாவில் உள்ள தாவணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட் தொகுதிகள், நாகாலாந்தில் உள்ள கோரிடாங் தொகுதி மற்றும் திரிபுராவில் உள்ள தர்மநகர் தொகுதி ஆகியவற்றுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் தொடங்கியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்