Rock Fort Times
Online News

கமுதி அருகே 110 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய கிராமம்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் வசித்து வருபவர் 110 வயது பாட்டி ராமாயி. 1913ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறுவயதிலேயே திருமணமாகிவிட்டது. திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவரும் இறந்துவிட்டார். ராமாயிக்கு குழந்தைகளும் இல்லை. கணவரின் மறைவுக்கு பிறகு பேரையூர் கிராமத்தில் உள்ள தனது தாய்வழி சொந்தங்களுடன் வசித்து வருகிறார். அவர்களுடன் வசித்து வந்தாலும் தனக்கு தேவையான உணவை அவரே சமைத்து சாப்பிடுகிறார். சுளுக்கு, மூச்சு பிடிப்பு போன்ற பிரச்சினைகளையும், தான் வசிக்கும் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் ’மாந்தம்’ பிரச்சினையும் குணப்படுத்துவதில் மூதாட்டி ராமாயி கைதேர்ந்தவர் ஆவார்.ராமாயியின் இந்த சேவை பேரையூர் கிராம மக்கள் மத்தியில்வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட பேரையூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள், விளையாட்டு கழகத்தினர் மற்றும் ஊர் மக்கள் முடிவு செய்தனர். அதன்படி ராமாயி பாட்டியின் 110-வது பிறந்தநாளை அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அவருக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து ராமாயி பாட்டி பேரையூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர்-சிறுமிகள் முன்னிலையில் கேக் வெட்டினார். பின்பு அதனை அனைவருக்கும் வழங்கினார். 110 வயது ஆன போதிலும் ராமாயி பாட்டி கம்பீரமாக நின்று கேக் வெட்டியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈஸ்டர் தினத்தில் ஊர் மக்களுக்கு பாயாசம் செய்து இலவசமாக வழங்கி வந்துள்ளார். ராமாயி பாட்டி தற்போது வயது முதிர்வு காரணமாக அதனை நிறுத்தி விட்டார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பாயாசம் தயாரித்து, அவரது கையால் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பாட்டி ராமாயி வழங்கிய கேக் மற்றும் பாயாசத்தை சாப்பிட்ட கிராம மக்கள், அவரிடம் ஆசி பெற்றனர். ஊர் மக்கள் தன் மீது வைத்துள்ள அன்பை பார்த்து பாட்டி ராமாயி நெகிழ்ச்சி அடைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்