Rock Fort Times
Online News

லால்குடி அருகே துணிகரம்: கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு…!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஒரு கால பூஜை நடைபெறும் இக் கோவிலில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். தினமும் காலை 7 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி 28ம் தேதி குடிப்பாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து 50க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி மிகப்பெரிய அளவில் விருந்து மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில், பூட்டப்பட்டிருந்த கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலையும் உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பணம், நகைகளை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால், கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பழுதாகி இருந்ததால் மர்ம நபர்களின் உருவம் பதிவாகவில்லை. இருந்தாலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்