திருச்சி மாவட்டம், துறையூர் விநாயகர் தெருவில் வசிப்பவர் மணிமாறன். கொத்தனார். இவர் நேற்று(17-05-2024) நீலகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று இருந்தார். இந்நிலையில் இரவில், மணிமாறன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இன்று காலை மணிமாறனின் தங்கை மகேஸ்வரி அண்ணன் வீட்டுக்கு சென்றபொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.