ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: பகல்பத்து உற்சவம் தொடங்கியது- பச்சை பட்டு உடுத்தி சுவாமி புறப்பாடு…!
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். இவற்றில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று டிச.19 (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் இன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 1ம் நாளில் கல் இழைத்த நேர் கிரீடம் சாற்றி, திருமார்பில் – பங்குனி உத்திர பதக்கம், அதன் மேலே அழகிய மணவாள பதக்கம் – ஸ்ரீ ரங்கநாச்சியார் பதக்கம், வைரக்கல் ரங்கூன் அட்டிகை, சந்திரஹாரம், சிகப்பு கல் இழைத்த அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, அரைச் சலங்கை, 8 வட முத்து மாலை, வைரக்கல் அபய ஹஸ்தம் – அதில் தொங்கல் பதக்கம் அணிந்து பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு டிச.30ம் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Comments are closed.